நாகை மாவட்டம் மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம் விவசாய நிலங்களில் காவல்துறை உதவியுடன் கெயில் நிறுவனம் குழாய்களை பதித்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலகஸ்திநாதபுரம் முடிகண்டநல்லூர், உமையாள்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். எனினும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் குழாய்களை பதித்துவருகிறது.
கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு - நாகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - நாகை விவசாயிகள் குற்றச்சாட்டு
நாகை: முக்கரும்பூர் ஊராட்சியில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தரங்கம்பாடி தாலுக்காவிற்குட்பட்ட முக்கரும்பூர் ஊராட்சியில் ஒரு மாதத்திற்கு முன்பு கெயில் நிறுவனம் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் குழாய் பதிக்க முயற்சித்தபோது விவசாயிகள் விஷபாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் கெயில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் காவல்துறை உதவியுடன் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க தங்களுக்கு நெருக்கடி தருவதாகக் கூறி விவசாயிகள் வயலில் இறங்கி இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கெயில் குழாய் பதிப்பால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.