மயிலாடுதுறை: விஞ்ஞான வளர்ச்சி அனைத்து துறைகளிலும் பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. மேலும், மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, சமீப நாட்களாக இறந்தவர்களின் சிலைகளை உருவாக்கி, அதை வீட்டின் முக்கிய நிகழ்வுகளில் பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது.
அதுபோன்ற சம்பவம் தான் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றுள்ளது. சீர்காழியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் நண்பர்கள், அவரது திருமண நிகழ்வில், இறந்த அவரது தந்தையின் முழு உருவத்தை வடிவமைத்து திருமண பரிசாக சர்ப்ரைஸ் (Surprise) அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாகராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில், நாகராஜின் இளைய மகன் ராஜ்குமாருக்கும், திருப்பங்கூரையைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் இன்று (அக்.20) திருமணம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, தந்தை மீது அதிக பாசம் கொண்ட ராஜ்குமார், தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என வருந்தி, அதை தனது நண்பர்களிடம் கூறி கண் கலங்கியுள்ளார். இதனையடுத்து, தனது நண்பணின் ஏக்கத்தை போக்கும் வகையில் அவரது ஆசையை நிறைவேற்ற எண்ணிய நண்பர்கள், ராஜ்குமாரின் தந்தை நாகராஜின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்தனர்.