கழிப்பறை கட்டாமலேயே கட்டியதாகக் கணக்கு காட்டி மோசடி
மயிலாடுதுறை: கழிப்பறை கட்டாமலேயே கட்டியதாகக் கணக்கு காட்டி முறைகேடு நடத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட சிறப்பு அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை ஒன்றியத்தில் கழிப்பறைக் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.
மயிலாடுதுறை ஒன்றியம் வில்லியநல்லூர் ஊராட்சி கொண்டல் கிராமத்தில் வசிக்கும் விஜயா, ஆறுமுகம், ஜெயராமன் உள்ளிட்ட 15 நபர்கள் பெயரில் போலியாக ரசீது தயாரித்து ரூ.1.65 லட்சம் சுருட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த மோசடி குறித்து தூய்மை இந்தியா திட்டம் சார்பில் மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மோடி. கண்ணன், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதாவிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடைபெற்ற கழிப்பறைக் கட்டும் திட்டத்தில் நடந்த ஊழலில் ஈடுபட்ட அலுவலர்களைக் கண்டுபிடித்து சரியான தண்டனை அளிக்க வேண்டும்.
மோசடி செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் பறிமுதல் செய்வதுடன், ஏமாற்றப்பட்டவர்களுக்கு கழிப்பறைக் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு அளிக்கையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.