மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம்தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ராமதாஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற வாணவெடி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருமணத்திற்கு தேவையான வாணவெடிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, வாணவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. வழக்கம் போல இன்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது எதிர் பாராத விதமாக ஏற்பட்ட திடீர் விபத்தில், அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின.
இதனால், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இந்த விபத்தில், வெடி கிடங்கில் பணியாற்றிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள், விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
மேலும், வெடி விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரம் வரை, 18க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி கிடந்தது தெரியவந்தது. வெடி தயாரிக்கும் இடத்தில் போடப்பட்டு இருந்த இரும்பு சீட்டினால் ஆன கொட்டகை முற்றிலும் இடிந்து காணப்பட்டது.
தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.