மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் படுகொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக அசம்பாவிதம் ஏற்படாதவாறு ஏராளமான காவல் துறையினர் மயிலாடுதுறை நகர் முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை நகரப்பகுதிகளில் உள்ள ஐந்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. மயிலாடுதுறை அரசு மருத்துவமனைப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் குவிந்துள்ளதால் நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வன்னியர் சங்க மாநிலத்தலைவர் பு.தா.அருள்மொழி, துணைத்தலைவர் ம.க. ஸ்டாலின், உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட கண்ணனின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினர்.