மயிலாடுறை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னாள்அமைச்சருமான பல்லம் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. வேட்பாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய நடவடிக்கைகளால் கிராமப் பொருளாதாரமும், சிறு, குறு தொழில்களும், அமைப்பு சாரா தொழில்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுப் பரவலின்போது நிலைமையை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை. ஹரியானா, பஞ்சாப் மாநில உழவர்கள் குறைந்தபட்ச ஆதாரவிலையைக் கேட்டு 100 நாள்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், மத்திய அரசு அவர்களைப் பொருட்படுத்தவில்லை. மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருந்தும் அவர்கள் உழவர்களின் பிரச்சினையை அவையில் விவாதிக்கவில்லை.