மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் மூதாட்டியை வீடுபுகுந்து தாக்கிய வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் (அப்பா, மகன்) உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மனைவி மீனாட்சி (62). இவரது வீட்டில் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில், மீனாட்சி காயமடைந்து குத்தாலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளித்திருந்தார்.
தங்கசாமியின் மகன் அதிமுகவில் இணைய இருந்ததால், இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மீனாட்சியைத் தாக்கிய வழக்கில் பிச்சைமுத்து மகன்கள் பி.சந்திரசேகர், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்க் குத்தாலம் பி.கல்யாணம், கோவிந்தராஜ், குத்தாலம் பி.கல்யாணம் மகன்கள் க.அன்பழகன், கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் க.அறிவழகன், மனோகர், ரவி உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 294 (பி), 324 மற்றும் 506/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.