மயிலாடுதுறை: கல்லிலே கலைவண்ணம் காண்பவர்கள் கலைஞர்கள். அத்தகைய கலைஞர்கள் எப்போதும் வித்தியாசமான முறையில் சிந்தித்து, கலைப் படைப்புகளை உருவாக்கி, காண்பவர்களைப் பிரமிக்கச் செய்வார்கள். அவ்வாறான படைப்புகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார் ஒரு இளைஞன்.
மயிலாடுதுறை மாவட்டம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). பட்டய படிப்பில் மின் பொறியாளர் (டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்) படித்துள்ள இவர், தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததை அடுத்து சென்னையில் கிடைக்கும் வேலையைச் செய்துவந்துள்ளார்.
பின்னர் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு குடிபெயர்ந்தார். 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வதற்காக ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார்.
பொழுதுபோக்காகத் தொடங்கியது சாதனையாக மாறியது
அப்போது சமூக வலைதளங்களில், சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட் (sun light wood burning art) எனப்படும் கலையைக் கண்டுள்ளார். இந்நிலையில் இக்கலையில் தலை சிறந்து விளங்கும் அமெரிக்க நாட்டு கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் பபடாகிஸை சமூக வளைதளங்களில் பின்தொடர ஆரம்பித்துள்ளார்.
இக்கலையின் மீது ஆர்வம்கொண்ட விக்னேஷ், தானாக மரப்பலகையில் சூரிய ஒளி மூலம் உருபெருக்கியைப் பயன்படுத்தி வரைய முயற்சித்து வெற்றிகண்டார். இந்தியாவில் இதுவரை இக்கலையைப் பயன்படுத்தி யாரும் ஓவியம் வரைந்ததில்லை.
இயந்திர உதவியுடன் கணினியைப் பயன்படுத்தி லேசர் கதிர் மூலம் மட்டுமே ஆங்காங்கே இதுபோன்ற வுட் பர்னிங் ஓவியங்கள் வரையப்பட்டுவருகின்றன. ஆனால் முதல் முறையாக உருப்பெருக்கி மூலம், சூரியஒளியால் மரப்பலகையை கருகச் செய்து ஓவியம் படைத்துவருகிறார் விக்னேஷ்.
பிரபலங்கள் பாராட்டு
இக்கலையினை அவர் பள்ளியிலோ, கல்லூரியிலோ கற்கவில்லை. ஓவியத்திற்கான பயிற்சியும் முறையாகப் பெறவில்லை. சமூக வலைதளங்களின் மூலம் மைக்கேல் பபடாகிஸை பின்தொடர்ந்து, அவரையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, தொடர் சாதனை படைத்துவருகிறார்.