மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்த அவர் கூறியதாவது, "மயிலாடுதுறையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 33 விழுக்காட்டினரால் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் இடர் உள்ளது.
அதனால், இன்று (நவம்பர் 28) 498 இடங்களில் நடத்தப்படவுள்ள 12ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 45 விழுக்காடு கூடுதலாகப் பெய்துள்ளது.
எனவே பருவமழையால் 5,500 ஹெக்டேர் பயிர்கள் 33 விழுக்காட்டிற்கு அதிகமாகச் சேதமடைந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 350 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 777 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மனித உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
தற்போது தொடர்ந்து பெய்யும் மழையால் பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்மைத் துறை மூலம் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. மேற்கு மாவட்டங்களில் தொடர்மழை பெய்வதால் கொள்ளிடம், காவிரி போன்ற ஆறுகளில் நீர் அதிக அளவில் வந்தாலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனால் ஆறு, ஏரிகளில் குளிப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதனையடுத்து 18 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர். எனவே இன்று நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றைச் செய்து பயன்பெற வேண்டும்" எனத் தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உடன் இருந்தார்.
இதையும் படிங்க: Chennai Rains: மிரட்டும் மழை; பணிகளை முடுக்கி விடும் முதலமைச்சர்