மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் பழவேலங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் - லதா தம்பதி. இவரது தெருவில் லதாவின் வீட்டோடு சேர்த்து மொத்தம் மூன்று வீடுகள் உள்ளன. இவர்களது வீட்டுக்கு செல்லும் பாதையை, அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன்கள் ராஜ்குமார், ராஜ்மோகன் மற்றும் ராஜ்செல்வம் ஆகிய மூன்று பேர், தங்களின் பட்டா நிலம் என கூறி வேலி வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த தெருவில் வசித்து வந்த மற்ற இரண்டு குடும்பத்தினர் வீட்டை காலி செய்து விட்ட நிலையில், லதா குடும்பத்தினர் மட்டும் இதுகுறித்து கடந்த மூன்று மாதமாக தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரினர்.
இதனிடையே தரங்கம்பாடி வட்டாட்சியர் விசாரணை நடத்தி வேலியை அகற்ற கேட்டபோது, சம்பந்தப்பட்ட ராஜ்குமார் தரப்பினர் மறுத்து விட்டனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.28) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் லதா குடும்பத்தினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.