மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜன.7) முதல் வருகிற 10ஆம் தேதி வரை, பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) மதியம் தொடங்கி, இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, மயிலாடுதுறையில் 26.70 மிமீ, மணல்மேடு 4 மிமீ, சீர்காழி 62.40 மிமீ, கொள்ளிடம் 33 மிமீ, தரங்கம்பாடி 53 மிமீ, செம்பனார்கோவில் 38.60 மிமீ என சராசரியாக 36.28 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.
தொடரும் மழையின் காரணமாக, தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.