நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னமேடு மீனவ கிராமத்தில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் மாசி மக திருவிழாவை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெற்றது. உள்ளூர் மீனவர்களுக்காக நடைபெற்ற இரண்டாமாண்டு படகுப் போட்டியில் ஒரு படகில் மூன்று மீனவர்கள் வீதம் 13 படகுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
சீறிப்பாய்ந்த படகுகள்; உள்ளூர் மீனவர்கள் கடலில் நிகழ்த்திய விளையாட்டுப் போட்டி - fishermens boat race held in nagappattinam
நாகப்பட்டினம்: சின்னமேடு மீனவ கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மீனவர்களுக்கான படகுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
மீனவ பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் முன்னிலையில் படகுப்போட்டி உற்சாகமாக நடைபெற்றது. போட்டியில் கலந்துகொண்ட மீனவர்களை பொதுமக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். கடற்கரையிலிருந்து தொடங்கி ஒரு நாட்டிங்கல் தூரம் போட்டி நடைபெற்றது. கடற்கரையிலிருந்து கிளம்பிய படகுகள் அலையின் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.
இந்தப் போட்டியில் வீரப்பன் குழுவைச் சேர்ந்த தனபால் செல்லதுரை முதலாம் இடத்தையும், ராஜ்குமார் குழுவைச் சேர்ந்த ராஜராஜன், மணிகண்டன் ஆகியோர் இரண்டாமிடத்தையும், பழனியாண்டி குழுவைச் சேர்ந்த மூர்த்தி, சுரேஷ் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து குழுவினர்களுக்கு ரொக்கப் பணமும், கேடயங்களையும் மீனவ பஞ்சாயத்தார்கள் பரிசாக வழங்கி பாராட்டினர்.