தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வேண்டும்: 21 மீனவ கிராமங்கள் வேலை நிறுத்த போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தடையை மீறி மீன்பிடித்ததாக சுருக்குமடி வலை பயன்படுத்திய படகை சிறைபிடித்த தரங்கம்பாடி மீனவர்கள், சுருக்குமடி வலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 21 மீனவ கிராமங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

surukkumadi valai
சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்க

By

Published : Aug 1, 2023, 8:26 AM IST

மயிலாடுதுறையில் 21 மீனவ கிராமங்கள் வேலைநிறுத்த போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் சுருக்கமடி வலைக்கு ஆதரவாக பூம்புகார் தலைமையிலான 7 மீனவக் கிராமங்களும், சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிராக தரங்கம்பாடி தலைமையிலான 21 மீனவக் கிராமங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற நிபந்தனைக்குட்பட்ட படகுகள் இல்லாததால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பூம்புகார் தலைமையிலான மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தும் 37 விசைப்படகுகளில், 11 விசைப் படகுகளை அதன் உரிமையாளர்கள் புதுச்சேரிக்கு கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சில படகுகள் மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாகவும், அந்த மீன்களை வாங்கி சந்திரபாடி மீனவர்கள், தங்களது பைபர் படகில் ஏற்றி வந்ததாகவும் தரங்கம்பாடி மீனவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு சந்திரபாடி மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீன்களை ஏற்றி வந்த சந்திரபாடி மீனவர்களின் படகையும், அதில் வந்த மூன்று மீனவர்களையும் சிறை பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவலறிந்த கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொறையார் போலீசார் விரைந்து சென்று சந்திரபாடி மீனவர்களை மீட்டு பொறையார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் துறைமுகத்தில் பதட்டமான சூழல் நிலவியது. இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட பைபர் படகில் இருந்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் தரங்கம்பாடி மீனவர்கள் ஏலம் விட்டனர்.

பின்னர், தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படித்தி மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்ய வேண்டும். சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அனுமதி பெறாமல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும், இதில் 21 மீனவக் கிராமங்கள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல் நிலையத்திற்கு வந்த சந்திரப்பாடி மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். பைபர் படகில் பிடித்த மீனை ஏலம் விட அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர்? என்றும், தங்கள் படகையும், மீனவர்களையும் தரங்கம்பாடி மீனவர்கள் கடத்தி வந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்’. இதனைத்தொடர்ந்து மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'விளைநிலங்களை அழித்தால் ஆடு மாடுகளை போல் இலை தழைகளை உண்ணும் நிலை ஏற்படும்' - விவசாயிகள் நூதன போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details