சுருக்குமடி வலையை அனுமதித்தால் போராட்டம் நடத்துவோம் மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரைத் திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட, 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி, 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்திருந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான தரங்கம்பாடியில், சுருக்குமடி வலையை முற்றிலும் தடைசெய்ய கோருவது தொடர்பாக 11 மாவட்ட மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டைமடி, அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது குறித்து மீனவ பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ள விசைப்படகு ஆகிய மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். மேலும் சுருக்குமடி வலையைத் தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை வரும் என்றால் 11 மாவட்ட மீனவ கிராமங்களும் தொழில் மறியல் செய்வது என்று ஏகமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி; உச்சநீதிமன்ற விதித்த நிபந்தனை என்ன?