தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலையை தடைசெய்யும் வரை வேலைநிறுத்தம்: 18 மீனவ கிராம கூட்டத்தில் தீர்மானம்!

சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடைசெய்ய வலியுறுத்தி தொடர் தொழில் மறியல் போராட்டத்தை தொடர்வதாக தரங்கம்பாடியில் நடைபெற்ற 18 மீனவ கிராம ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ban illegal net
சுருக்குமடி வலை தடை

By

Published : Aug 2, 2023, 10:32 AM IST

மீனவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மொத்தம் 28 மீனவ கிராமங்கள் உள்ளது. அதில் பூம்புகார் தலைமையிலான 7 கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், தரங்கம்பாடி தலைமையிலான 21 மீனவ கிராமங்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில விதிமுறைகளுக்குட்பட்டு சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. அதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட கடலோரக் கிராம மீனவர்களுக்கு சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளனர். இதனால் பூம்புகாரிலிருந்து 11 விசைப்படகுகள் புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டு சுருக்குமடி வலை மூலம் மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்குள் ஒரு சில படகுகள் வந்து நேற்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும், அந்த மீனை சந்திரபாடி மீனவர்கள் எடுத்து வந்ததாகவும் குற்றம்சாட்டி பைபர் படகு மற்றும் அதில் வந்த மீனவர்களை தரங்கம் பாடி மீனவர்கள் சிறை பிடித்தனர்.

அதன் பின்னர் சம்பவம் அறிந்து வந்த போலீசார் மீனவர்களை மீட்ட நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீன்கள் ஏலம் விடப்பட்டது. ஆனால் பைபர் படகு விடுவிக்கப்படவில்லை. இதற்கு சந்திரபாடி கிராம மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்கவில்லை என்றும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மீன்களை ஏலம் விடப்பட்டது என்று கேள்வி எழுப்பி பைபர் படகை தங்களிடம் ஒப்படைக்கக் கோரினர்.

இதையும் படிங்க: சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வேண்டும்: 21 மீனவ கிராமங்கள் வேலை நிறுத்த போராட்டம்!

இந்நிலையில் சுருக்குமடி வலையை முழுமையாகத் தடை செய்ய வலியுறுத்தி தரங்கம்பாடி தலைமையிலான 21 நாட்டு படகு மீனவ கிராமங்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் தரங்கம்பாடியில் நேற்று இரவு சுருக்கு மடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமம் சார்பாக 19 மீனவ கிராம நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தற்போது அந்த கூட்டத்தில் சுருக்கு மடி வலையை முற்றிலும் தடைசெய்யக் கோரி 6 மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாகவும், முற்றிலுமாக தீர்வு கிடைக்கும் வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களும் தொடர்ந்து காலவரையற்ற தொழில் மறியலில் ஈடுபடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details