தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் வேதனை!

By

Published : Aug 9, 2023, 3:11 PM IST

சேமங்கலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் (DPC) திறக்கப்படாததால், சுமார் 320 மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

government direct paddy procurement station
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்லை கொட்டி வைத்துள்ள வீடியோ

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் காவிரி கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நெல், பருத்தி, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி போன்றவை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மற்றவைகளை விட அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகா பகுதிகளில் நிகழாண்டு முன்பட்ட குறுவைப் பருவத்திற்கு 34,813 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 39 ஆயிரத்து 250 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 119 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டடத்திலும், மற்றவை திறந்த வெளி நிலையங்களாகவும் செயல்படும் என்றும் கூறி குத்தாலம் அருகே மேக்கிரிமங்கலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்து வைத்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் - செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு சுமார் 1000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள கருவாழக்கரை, மருத்தூர் கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1500 ஏக்கரில் அறுவடை செய்யப்படும் நெல், சேமங்கலம் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

விவசாயிகள் ஆடுதுறை 36, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 ஆகிய சன்ன ரக நெல் மற்றும் ஏஎஸ்டி 16 மோட்டோ ரக நெல் ஆகியவற்றைச் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், சேமங்கலம் கிராமத்தில் கடந்த 20 நாள்களில் சுமார் 20 சதவீதத்திற்கும் மேல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து, கொள்முதல் நிலையம் திறப்பதற்காக காத்திருக்கின்றனர்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்க காலதாமதம் ஆவதால் விவசாயிகள் பலர் தனியாரிடமும் தங்கள் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, வெப்பச்சலனம் காரணமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், கொட்டி வைத்துள்ள நெல்லை இரவு நேரங்களில் தார்ப்பாய் கொண்டு மூடியும், பகல் நேரத்தில் வெயிலில் காயவைத்தும் பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மேலும், அறுவடை செய்து கொட்டி வைத்துள்ள நெல்லை காய வைப்பதற்கும் மூடுவதற்கும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். தற்போது, சுமார் 320 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறந்தால்கூட ஏற்கெனவே கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய 10 நாட்கள் பிடிக்கும்.

இந்நிலையில், அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் வரும் நாட்களில் கூடுதல் நெல் விற்பனைக்காக கொண்டுவரப்படும். எனவே, அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கிடங்குக்கு கொண்டு சென்று விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முழக்கங்களை எழுப்பி கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: World Cat Day: உலக பூனைகள் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய பூனை ஆர்வலர்கள்

ABOUT THE AUTHOR

...view details