மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியிருந்த நெற்கதிர்கள் நிவர், புரவி புயல் காரணமாக நீரில் மூழ்கியது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட நல்லாடை கிராமத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வங்கிகள் மூலம் வரவு வைக்கப்பட்ட நிலையில், திருவிடைக்கழி தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ள இலுப்பூர், விசலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 240 விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணத் தொகை வரவில்லை. இதனைக் கண்டித்து இலுப்பூர் - சங்கரன்பந்தல் சாலையில் விவசாயிகள் 2ஆவது முறையாக இன்று (பிப். 06) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்பூர் கிராம தலைவர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்ட அனைத்து கட்சினர் கலந்து கொண்டு நிவாரணம் வழங்கக் கோரி முழக்கமிட்டனர்.