மயிலாடுதுறை :கொற்கை ஊராட்சியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டு கொற்கை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கருகிய பயிர்கள்
அப்பகுதியில் விவசாயபணிக்காக உள்ள 8 மின் மோட்டார்களை இயக்க முடியாததால் 25 ஏக்கர் நெற்பயிர்களுக்கு விவசாயிகளால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தண்ணீரின்றி வறட்சியால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு சம்பா பயிர்கள் கருகி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பலமுறை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தும் அறுந்து விழுந்த மின்கம்பியை இதுவரை சரி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.