மயிலாடுதுறை: மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி கறுப்புக் கொடி ஏந்தி உழவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காவிரி வல்லுநர் குழுவைக் கலைத்த மத்திய அரசைக் கண்டித்தும் போராடினர். இப்போராட்டமானது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தின்போது,
- தடுத்திடு தடுத்திடு கர்நாடகாவில் அணை கட்டுவதைத் தடுத்திடு,
- திரும்பப் பெறு திரும்பப் பெறு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு
என்று மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் டெல்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
10 லட்சம் ஏக்கர் நிலத்தில்தான் வேளாண்மை
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம், “70 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தில் வேளாண்மை நடந்தது.
ஆனால் இன்று 30 லட்சம் ஏக்கர் நிலத்தில் வேளாண்மை நடத்தும் வகையில் சிறு, சிறு அணைகளைக் கட்டி நீரினைத் தேக்கிக் கொண்டுள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் 30 லட்சம் ஏக்கர் நிலத்தில் வேளாண்மை நடந்த இடத்தில் தற்போது 10 லட்சம் ஏக்கர் நிலத்தில்தான் வேளாண்மை நடந்துகொண்டிருக்கிறது. இதற்கே நீர் இல்லை. மேலும் குடிநீர் பஞ்சம் வேறு. இதுபோன்று பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றோம்.