நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பட்டவர்த்தி ஊராட்சியில் பழவாறு என்ற வடிகால் ஆறு ஓடுகிறது. இந்நிலையில், பட்டவர்த்தி பாலத்திற்கு முன்பாக களமேட்டுத்திடல் என்ற இடத்தின் திருப்பத்தில் ஆற்று நீரால் கரை அரிப்பு ஏற்பட்டது.
இதில், 20 அடி அகலம், 200 மீட்டர் தூரம் வரையுள்ள ஆற்றின் கரை கரைந்து, தனியார் வயல்கள் வழியாக பழவாறு செல்கிறது. இதனால், ஆற்றினுள்ளேயே பொதுப்பணித் துறையினர் கரை அமைத்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழவாற்றை தூர்வாரும்போது பொதுப்பணித் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு பழவாறு தூர்வாரப்படாதபோது பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் ஆற்றின் வட எல்லையில் பழவாற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை விட்டுவிட்டு கரையை அமைத்துள்ளனர்.
அதன்பிறகு தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மேடான ஆற்றின் தென்புறத்தில் பத்தாயிரம் சதுர அடியை, அப்படியே விட்டுவிட்டு ஆற்றினுள்ளேயே புதிதாக கரையை அலுவலர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதனால் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தை திரும்ப பெற்று, ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.