காவிரி மேலாண்மை ஆணையின் உத்தரவுப்படி ஜூன் 8ஆம் தேதி கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 700 அடி கன நீரும், கபினி அணையிலிருந்து ஆயிரத்து 300 அடி கன நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்படி, கர்நாடகாவிலிருந்து மூன்று நாள்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட இரு அணைகளின் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு கடந்த 13ஆம் தேதி ஆயிரத்து 292 கன அடி வந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி நீர்வரத்து அதிகரித்து, 1, 643 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு பத்தாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட்டார். மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 16.05 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டது விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை தந்தாலும், நாகை மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், காவிரி நீர் வந்தும் தங்கள் பகுதிக்கு பயனில்லை என்கின்றனர் நாகை விவசாயிகள். மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இதனை நம்பி நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் விவசாயிகள் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்வதற்கு தயாராகியுள்ளனர்.