தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றிரவு லாரி ஒன்று மோதியதில் ஓஎச்டி லைன் அறுந்தது. இதனால் கேட் சிக்னல் பழுதானது.
அதனை சீரமைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் ரயில்கள் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து ஆடுதுறை கேட் பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து டீசல் இன்ஜின் கொண்டு வரப்பட்டு தற்காலிகமாக ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் சென்னை, திருச்சி, திருச்செந்தூர், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 3 மணி நேர காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.