புரெவி புயலால் கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருச்சி, கும்பகோணம் வழியாக காவிரி ஆறு கடைமடை பகுதியான காரைக்காலுக்கு பெரும் வெள்ளம்போல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காரைக்காலை சுற்றியுள்ள விழுதியூர், திருமலைராயன் பட்டினம், செல்லூர், திருநள்ளார் ஊர்களிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறையினர் அரசலாறு ,திருமலைராயன்ஆறு, நூலாறு, நாட்டாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் மதகுகளை திறந்து உபரி நீர்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெள்ளம் நீர் அதிவேகத்துடன் வருவதால் பாலங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.