நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலின் நிலை குறித்து முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'நாகையில் ஐந்து விழுக்காடு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாகும். எனவே, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசித்தால் மட்டுமே களநிலவரம் தெரியும். உயிர் காக்க வேண்டிய பிரச்னையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாரபட்சம் காட்டக்கூடாது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூகப்பரவல் அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்.