குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் 16ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பங்கேற்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வருங்காலத்தில் பெரிய ஆபத்து உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இதற்கு முன்னர் எந்த ஒரு வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், மற்ற மதத்தினவருக்கு ஒரு இடம், இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் என இப்போதுதான் முதன்முறையாக சட்டத்தில் வித்தியாசம் காட்டப்படுகிறது. முதலில் என்பிஆர் கணக்கெடுப்பை நடத்திவிட்டு அதன்பின் என்ஆர்சி கணக்கு எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இதைப் பற்றி யோசனை இல்லை என்று பிரதமர் சொன்னாலும், தேர்தல் அறிக்கை, மக்களவையில் பேசியதை பார்க்கும்போது இந்தத் திட்டம் இருப்பது புரிகிறது.