மயிலாடுதுறை: விவசாயப் பணிகளுக்காக மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. நள்ளிரவு காவிரி கடலுடன் கலக்கும் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் எல்லையை தண்ணீர் வந்தடைந்தது. இன்று (ஜுன் 2) காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாலங்காடு கதவணை பகுதியில் இருந்து காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டத்தில் திறக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே மூவலூர் என்ற இடத்தில் காவிரி ரெகுலேட்டர் (நீர் ஒழுங்கி) ஆறு மதகுகளுடன் அமைந்துள்ளது. இப்பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணி இந்த ஆண்டு மீண்டும் முழுவீச்சில் தொடங்கியது.
தண்ணீர் வருவதற்குள் பாலத்தின் அடிப்பகுதி கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், பாலம் கட்டுவதற்காக காவிரி ஆற்றின் இடது கரையில் 100 மீட்டர் அளவிற்கு கரை துண்டிக்கப்பட்டு இருந்தது.
தற்போது காவிரி ஆற்றில் 800 கனஅடி வரை தண்ணீர் செல்வதால் முழுவீச்சில் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் கரை துண்டிக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே புகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இடது கரை பக்கம் உள்ள இரண்டு மதகுகளை அடைத்து மீதமுள்ள நான்கு மதகுகள் வழியே தண்ணீர் செல்லும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும் தண்ணீர் வேகம் காரணமாக இடது கரையில் மண்ணரிப்பு ஏற்பட தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கரையில் மண் மூட்டைகளை அடுக்கியும் தடுப்பு பலகைகள் அமைத்தும் தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்கூட்டியே திட்டமிடாத காரணத்தால் அவசரஅவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் தண்ணீர் முழுவீச்சில் வரும்பொழுது மணல் மூட்டைகள் வரை கரை அரிப்பை தடுக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ள நிலையில், தொடர்ந்து காவிரியில் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுமா அல்லது தண்ணீரின் அளவு குறைக்கப்படுமா என்று விவசாயிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் முழு அளவிற்கு பாசன வசதி தண்ணீர் அளிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தெரியவருகிறது.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை மூடக்கோரிய மனு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு