மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், இயற்கை விவசாயி தினேஷ். இவர் தனது ஓய்வுநேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, தன்னுடைய மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக, தமிழர் மரபுக் கலைகளை ஆர்வமுள்ளோருக்கு பயிற்றுவித்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கரோனா தொற்று விடுமுறையில் ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்டக்கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். சீர்காழியைச் சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.