நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயில்கள் மற்றும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே 2 நிமிடம் நின்று செல்லும்.
இந்நிலையில் நேற்று (ஏப்.18) மாலை நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு காரைக்கால் துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு ரயில் வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
ஆனால் சரக்கு ரயில் இந்த ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. ஆனால் சரக்கு ரயில் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நின்றதால் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலைய அதிகாரி, சிக்னல் சரியாக இருந்தும் சரக்கு ரயில் ஏன் நிறுத்தப்பட்டது என ரயில் டிரைவர் முத்துராஜாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு முத்துராஜா தான் 12 மணி நேரம் தான் பணி செய்ய வேண்டும், ஆனால் ரயிலை 12 மணி நேரம் 15 நிமிடம் இயக்கிவிட்டேன். இனி ஓரு நிமிடம் கூட வேலைப்பார்க்க முடியாது. சரக்கு ரயிலை வேறு டிரைவர் வைத்து இயக்கி கொள்ளுங்கள் என்று கூறியதாக வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நிலைய அதிகாரி, முத்துராஜாவிடம் மயிலாடுதுறை வரை ரயிலை இயக்குங்கள், அங்கிருந்து வேறு டிரைவர் ரயிலை இயக்கி கொள்வார். இன்னும் பத்து நிமிடம் வேலை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு முத்துராஜா சம்மதம் தெரிவிக்கவில்லை.
சரக்கு ரயிலை பாதியில் நிறுத்திய டிரைவர் பின் சிலமணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு முத்துராஜா சரக்கு ரயிலை மயிலாடுதுறை ஜங்சன் வரை இயக்க ஒப்புக்கொண்டார். சரக்கு ரயிலில் 60 பெட்டிகள் கொண்டதால் ரயில் பெட்டிகள் ரயில்வே கேட்டை தாண்டி நீண்டு நின்றது. இதனால் ரயில்வே கேட் திறந்தும் குறுக்கே ரயில் நின்றதால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சரக்கு ரயில் நிறுத்தப்பட்டதால் பின்னே வரும் ரயில்கள் அனைத்தும் சிக்னல் சரி இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.