கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மக்கள் தங்கள் பங்களிப்பாக நிதி வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. அதனையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவர்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். அந்தவகையில் மற்றவர்களுக்கு உதாரணமாக பள்ளி மாணவர்கள் தாங்கள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த தங்களது சிறுசேமிப்பு நிதி கணக்கிலிருந்து தலா 100 ரூபாய் பெற்று 2 ஆயிரத்து 800 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மனமுவந்து கரோனா நிவாரண நிதியளித்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் - கரோனா நிவாரண நிதியளித்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்
நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே அரசு உதவி தொடக்கப் பள்ளியில் பயிலும் 28 மாணவர்கள் இணைந்து தாங்கள் சேர்த்து வைத்திருந்த சேமிப்பிலிருந்த ரூ. 2 ஆயிரத்து 800-ஐ கரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![மனமுவந்து கரோனா நிவாரண நிதியளித்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் கரோனா நிவாரண நிதியளித்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6632318-423-6632318-1585818077438.jpg)
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே, கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா அரசு உதவி தொடக்கப் பள்ளியில் 5 முதல் 10 வயதுடைய 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து, பள்ளி வாயிலில் கைகளைச் சோப்பினால் தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டு, வரிசையில் காத்திருந்து பள்ளியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் தலா 100 ரூபாய் செலுத்தி சென்றனர்.
பள்ளியில் சிறுசேமிப்புத் திட்டத்தில் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை மாணவர்கள் மனமுவந்து கொடுத்ததை ஆசிரியர்கள், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வங்கி மூலமாக அனுப்பி வைத்தனர். இளம் பிராயத்தினரான தொடக்கப்பள்ளி மாணவர்கள் பரந்துபட்ட மனதுடன் நிதியளித்தது ஆசிரியர்கள், அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.