நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் திமுக ஒன்பது இடங்களிலும், அதிமுக ஏழு இடங்களிலும், சுயேச்சைகள் ஐந்து 5 இடங்களிலும் ஆகமொத்தம் 21 பேர் வெற்றிபெற்றனர்.
இந்நிலையில் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலக தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகணேஷ் முன்னிலையில் சரியாக 11 மணிக்குத் தொடங்கியது.திமுக சார்பில் 20ஆவது வார்டில் வெற்றிபெற்ற கமலஜோதிதேவேந்திரன், அதிமுக சார்பில் 10ஆவது வார்டில் வெற்றிபெற்ற பவானி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் திமுக உறுப்பினர் கமலஜோதி 11 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக உறுப்பினர் பவானி 10 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.வெற்றிபெற்ற ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகணேஷ் சான்றிதழ் வழங்கினார்.
இதனைத் தொடர்நது மதியம் 3.30 மணிமுதல் 4.00 மணிக்குள் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் துணைத் தலைவர் தேர்தல் நடத்த குறைந்தபட்சம் 11 உறுப்பினர்கள் மன்ற அரங்கில் இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமே மன்ற அரங்கிற்கு வருகைதந்து கையெழுத்திட்டு காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் நான்கு உறுப்பினர்கள் உள்ளே சென்றனர்.