மயிலாடுதுறை:பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகியது. 'வாரிசு' திரைப்படம் குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளதாக பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் வளர்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உறவுகளின் மேன்மையைத் தெரியவைக்கும் விதமாகவும், கூட்டுக் குடும்பத்தின் உன்னதத்தை விளக்கும் விதமாகவும் வாரிசு திரைப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் செயல்பட்டு வரும் (யூரோகிட்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி) தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களையும் பள்ளிக்கு அருகில் உள்ள ஆதரவற்ற முதியோர்களையும் பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மயிலாடுதுறையில் உள்ள ரத்னா திரையரங்கிற்குச் சென்று வாரிசு திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.