மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர், இயற்கை விவசாயி தினேஷ். விவசாயம் செய்வதோடு ஓய்வுநேரங்களில் கிராமம் கிராமமாக சென்று தமிழர் வீரவிளையாட்டு மரபுக்கலைகளை இலவசமாகப் பயிற்றுவித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலேயே முடங்கிய ஏழை மாணவர்களுக்கு அந்தந்த கிராமத்திற்கே சென்று தற்காப்புக்கலைகளை பயிற்றுவிக்கத் தொடங்கிய தினேஷ் தற்போதும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரபுக்கலையை பயிற்றுவித்து வருகிறார்.
இன்று (அக்.4) ஆயுதபூஜையை முன்னிட்டு சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் கூடிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிலம்பக்கலை மாணவ, மாணவிகள் தங்களது வீர விளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் பல்வேறு வீரவிளையாட்டுகளை நிகழ்த்திக்காட்டினர்.