மயிலாடுதுறையில் உள்ள ஒரு திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் நேற்று (அக்.14) திரையிடப்பட்டது. அத்திரைப்படத்தைப் பார்வையிட்டபின் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், 'மதிமுகவின் வாக்கு வங்கியில் கடந்த 10 ஆண்டுகளில் சரிவு இருந்தது. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக 29 ஆண்டுகள் இருந்தேன். நான் நேரடி அரசியலுக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. திமுகவுக்கு அடுத்ததாக தாங்கள்தான் என்ற பிம்பத்தை பாஜகவினர் உருவாக்குகின்றனர். பாஜகவுக்கு என்ன ஆதரவு உள்ளது? என்பது தேர்தல் நேரத்தில் தெரியும். திமுக ஆட்சி திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது.
கட்சி தலைமை முடிவெடுக்கும்:எல்லா இடத்திலும் இருக்கும் ஓரிரு குறைகளை, பாஜகவினர் மிகைப்படுத்தி தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர். திமுக அமைச்சர் கூறிய விதம் தவறாக இருக்கலாம். ஆனால், அதனை வெட்டி ஒட்டி இணையதளத்தில் வெளியிட்டு திட்டமிட்டு பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும்.