மயிலாடுதுறை:குத்தாலத்தில் மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி இல்ல விழாவில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தென்னிந்தியாவின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய தஞ்சாவூர் மண்டலத்தில், விவசாயத்துக்கு தண்ணீரின்றி கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை வயல்கள் காய்ந்து, கருகி வருகிறது.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை வழங்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கருக்கு மேல் இருந்த விளைநிலங்கள், தற்போது 15 லட்சம் ஏக்கருக்கும் கீழ் குறைந்துவிட்டது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால், வறட்சியான சூழல் நிலவும் இந்நேரத்தில் கர்நாடகா, தமிழகத்துக்கான தண்ணீரை வழங்காமல் வஞ்சிக்கிறது.
வறட்சியான சூழலிலும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 4 மாதங்களுக்கு முன்பு வரை அங்கு ஆட்சியில் இருந்தது, பாஜகதான். 8 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்துக்கு சுமூகமாக தண்ணீர் வழங்கவில்லை.
கர்நாடக அரசு தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகிறது. எப்போதெல்லாம் கர்நாடகாவில் அதிக மழை பெய்ததோ, அப்போது மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடகாவில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அரசியலைக் கடந்து தமிழக விவசாயிகளுக்கு தீர்வு காண வேண்டும்.