தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் ரகளை: தட்டிக்கேட்ட காவலருக்கு கத்திகுத்து

மயிலாடுதுறை: சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட காவலரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

drunk
drunk

By

Published : Oct 7, 2021, 10:09 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (32). இவர் திருவாரூர் மாவட்டம் இடையூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி தற்போது கடலோர காவல் நிலையத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சக்திவேல் தற்போது விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு (அக். 6) காத்திருப்பு பெட்ரோல் பங்க் அருகே சிலர் குடிபோதையில் சாலையோரம் நின்றபடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியே வந்த சக்திவேல் இதனைத் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து ரகளையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். அதன்பின் சக்திவேல் தனது வீட்டிற்குத் திரும்பும்போது, ரகளையில் ஈடுபட்டவர்கள் மீண்டும் வந்து சக்திவேலை வழிமறித்து நின்றனர்.

அதன்பின் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலை குத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதில் சக்திவேலுக்கு தலை, கையில் காயம் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பாகசாலை காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'அரசு பேருந்தில் ஆண்களையும் இலவசமாக ஏற்றி செல்லுங்கள்' - மதுப்பிரியர் ரகளை

ABOUT THE AUTHOR

...view details