நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பாதாளச் சாக்கடை குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பாதாள சாக்கடை அடிக்கடி உடைந்து பள்ளம்: அரசு கவனிக்குமா? இந்நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 10ஆவது முறையாக பாதாளச் சாக்கடை உடைந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாததால் தடுப்பு அமைத்து, அவை போக்குவரத்து குடியிருப்பு பகுதிகளின் வழியாக மாற்றிவிடப்பட்டது. இதன் விளைவாக தினந்தோறும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
மேலும், நகராட்சி நிர்வாகம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும், பாதாள சாக்கடையில் துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாதாளச் சாக்கடைப் பள்ளத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் மயிலாடுதுறை சின்னக்கடை வீதி மக்களுக்கு அரசு உதவுமா?