நாகை:மயிலாடுதுறை மாவட்டம் கலைஞர் அரங்கில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " தமிழர்களின் வரலாற்றையும் கலாசாரத்தையும் நம் கண் முன்னே நிறுத்தியவர் கலைஞர். பாண்டிய மன்னனை கேள்வி கேட்ட கண்ணகிபோல் இந்த ஆட்சியின் அவலத்தை நீங்கள் கேட்க முடியாது. பாண்டிய மன்னனிடம் இருந்த மாண்பை பழனிசாமி அரசு அமைச்சர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
இந்த பினாமி அரசு தமிழ்நாட்டை ரூ.5 லட்சம் கோடி கடனாளி ஆக்கியுள்ளது. சசிகலா சிறைக்கு சென்றதாலும், பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தியதாலும் பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி லக்கி பிரைசாக கிடைத்துள்ளது. ஆனால் குண்டூசி அளவு நன்மைகூட செய்யாமல் நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டை வீணாக்கிவிட்டார். மாநிலத்தை 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றவர்கள், ஊழல் செய்வதே இவர்களது வேலை. தேர்வுக்கு முதல்நாள் படிக்கும் மாணவர்போல் தேர்தலுக்கு முன்பு நன்மை செய்வதுபோல் முதலமைச்சர் நடிக்கிறார். இப்போது ரோஷம் வந்தவர்போல பாஜகவுக்கு நான் அடிமையில்லை என்று பேசுகிறார்.
தேர்தலுக்காக ஷோ காட்ட பிரதமர் சென்னை வந்துள்ளார். அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டப்பட்டும், திட்டம் தொடங்கப்படாதது, நீட் தேர்வு விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து கேட்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? கொத்தடிமை அதிமுக அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.
ஜிஎஸ்டி வரி வருவாய் 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்காததை கேட்க முடிந்ததா? 14-ஆவது நிதி ஆணையம் 2500 கோடியை கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசு வழங்காததை ஏன் கேட்டு பெறமுடியவில்லை? மத்திய அரசு, தமிழ்நாடு அரசை கொத்தடிமையாக நினைக்கிறது. முதல்வரின் உறவினர்கள் 3000 கோடி டெண்டர் ஊழல் விவகாரம் அமைச்சர்களின் ஊழல் வருமான வரித்துறையின் மூலம் வெளிவந்துவிடும் என்பதால் அதிமுக அரசு அடிமையாக உள்ளது.
நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்னிடம் அளித்த மனுக்கள் என் முதுகில் ஏற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அதன்மீது தீர்வு காணப்படும். முதலமைச்சவர் உறவிர்கள் மற்றும் பினாமிகள் மூலம் செய்த ஊழல் வழக்கு மத்திய அரசின் கையில் உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கை நிறைவேறும்" என்றார்.
ஷோ காட்ட பிரதமர் வந்திருக்கிறார்