நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை பகுதியில் தொடங்கினால் தங்கள் நிலத்தை தானமாக வழங்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் கடிதம் அளித்துள்ளது.
ஆனால் இந்த மருத்துவக் கல்லூரியை நாகை அருகில் ஒரத்தூரில் அமைக்க தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஒரத்தூர் கிராமத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலான மந்தைவெளி நிலம் தேர்வுசெய்யப்பட்டு, மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் மயிலாடுதுறை கோட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், திமுக தலைமைத் தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "மக்கள் தொகை அதிகம் கொண்டதும், மருத்துவ வசதியில் பின்தங்கிய பகுதியுமான மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியைத் திறக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இது குறித்து, மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.