நில அபகரிப்பு புகார்: திமுகவினர் எஸ்.பி. அலுவலகம் முற்றுகை - நில அபகரிப்பு புகார்
நாகப்பட்டினம்: நில அபகரிப்புப் புகாரில் காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள இரஜதகிரீஸ்வரர் கோயில், அரசு புறம்போக்கு, கடற்கரைான பகுதி, வனத் துறைக்குச் சொந்தமான இடங்களைப் பல்வேறு தரப்பினர் முறைகேடாக பட்டா மாறுதல் செய்து கையகப்படுத்திக் கொண்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து திமுக கீழையூர் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மீது அதிமுகவினரும், அதிமுகவினர் மீது திமுகவினரும், நாகப்பட்டினம் மாவட்ட நில அபகரிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை அடுத்து தாமஸ் ஆல்வா எடிசன் மீது நில அபகரிப்பு பிரிவு காவலர்கள் நில மோசடி பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று (செப்டம்பர் 21) அவரைக் கைதுசெய்ய ஏராளமான காவல் துறையினர் வேளாங்கண்ணியில் உள்ள அவரது இல்லம், விடுதிக்குச் சென்றனர்.
இதையறிந்த வேளாங்கண்ணியைச் சேர்ந்த திமுக கட்சியினர், காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக கூறி, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
அப்போது அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திமுக மாவட்டச் செயலாளர் கௌதமன், எஸ்.பி. செல்வநாகரத்தினத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என எஸ்.பி. உறுதி அளித்ததைத் தொடர்ந்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவினர், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினருக்கு நெருக்கடி கொடுத்துவருவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும் நில அபகரிப்புப் புகாரில் ஒருதலைபட்சமாக காவல் துறை நடந்துகொண்டால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.