தேமுதிக பொருளார் பிரேமலதா பேட்டி மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோயில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி) நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். அப்போது, பக்தர்கள் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஆதீனம் சார்பில் வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் வள்ளலார் கோயில் பிரசாதம் வழங்கி, இதை விஜயகாந்திடம் கொடுங்கள், அவர் விரைவில் குணமடைவார் என ஆதீனம் அருளாசி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள். ஆனால் சனாதனம் என்பதன் உண்மையான அர்த்தம் என்பது யாருக்கும் தெரியாது. ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது.
கொசுவை ஒழித்து விட்டோம், டெங்குவை ஒழித்து விட்டோம் என்று உதயநிதி சொல்வது பெரிய விஷயம் இல்லை. வறுமை, லஞ்சம், ஊழல், குண்டும் குழியுமான சாலைகள், விலைவாசி உயர்வு, டாஸ்மாக் கடைகள் என தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
இதையெல்லாம் செய்து, தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக இந்தியாவின் முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளில் முக்கியமாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்கள்.
அடுத்த தலைமுறைக்கான அரசியலை திமுக செய்யவில்லை. தேர்தலுக்காக சனாதனம் என்று சொல்கிறார்கள் இதனால் நமக்கு என்ன பயன்? இந்துகள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது.
தேர்தல் ஆதாயத்திற்காக சனாதனம் என்ற வார்த்தையை சொல்லி பிரித்தாளும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அதை செய்கிறார். இளைஞரான உதயநிதி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர் பழைய அரசியலை கையில் எடுக்கிறார்.
நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் சாதி, மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை. அனைத்தும் கண் துடைப்பு. தேர்தல் வந்துவிட்டால் சனாதனத்தை உயர்த்தி பேசி பத்து நாட்களுக்கு விவாதங்கள் நடத்துவார்கள். இதனால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை. பிரித்தாளும் சூழ்ச்சி செய்து மக்களிடையே பாகுபாட்டையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை திசை திருப்பி குழப்பம் விளைவிக்கும் செயலை செய்கின்றனர்.
நூறாண்டு காலத்திற்கு முன்பு, நடைபெற்ற சம்பவங்களை உதயநிதி பட்டியலிடுகிறார். கணவன் இறந்தால் யார் இன்று உடன்கட்டை ஏறுகிறார்கள், மொட்டை அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் சனாதனம் என்று விளக்கம் அளிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரு உதாரணத்தை அவர்களால் காண்பிக்க முடியுமா எதுவுமே இல்லாததை சொல்கிறார்கள். இன்று நாம் சந்திரயான் நிலவுக்கும், ஆதித்யா L1 சூரியனுக்கும் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி உள்ளோம். தற்கால அரசியலைப் பேச வேண்டிய உதயநிதி நூறாண்டு காலத்திற்கு பின்னோக்கி உள்ளார். இதனால் மக்களின் மிகப்பெரிய வெறுப்பை உதயநிதி சம்பாதித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். மக்களின் ரத்தத்திலும், உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப் போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு - வேலையை உதறிய அரசு பள்ளி ஆசிரியர்!