மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி ஊராட்சி விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு 1959-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானத்தால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கழித்து 2016-இல் 26-வது குருமகா சந்நிதானம் சண்முகதேசிக சுவாமிகள் திருப்பணியை தொடங்கி வைத்தார். 2019 டிசம்பரில் அவர் மறைந்தார்.
27-வது சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் குடமுழுக்குப் பணியை தீவிரப்படுத்தி அடுத்த மாதம் 4-ஆம்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த கோயிலில் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவரும்போது கோயிலின் வடபுறத்தில் இரண்டு மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டது. அதில் மேல்புறத்தில் ஒன்றை கட்டுவதற்காக 10 அடி ஆழத்தில் குழிதோண்டியபோது கோயிலின் உள்பிரகார சுவற்றை ஒட்டியவாறு தொன்மை வாய்ந்த மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு நீளம் 4அடி அகலத்தில் சுவர் ஒன்று இருந்தது.
அந்த சுவற்றை உடைத்து பார்த்தபோது சுரங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அதன் உள்ளே 10அடி தூரம்வரை சென்று பார்த்தபோது அங்கே ஓரு சுவர் உள்ளது தெரியவந்தது. இந்த சுரங்கத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாமல் கோயில் நிர்வாகத்தினர் அதை அடைத்துவிட்டு மழைநீர் வடிகாலுக்கான சிமெண்ட் உரை இறக்கி முற்றிலும் மூடியுள்ளனர்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி என்பவர் கூறுகையில் 'தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்துப் பயிற்சிகளும் மிகவும் ரகசியமாக பயிற்சிக் களங்கள் கோயில் வளாகத்தில்தான் அமைக்கப்பட்டு வந்துள்ளது. அனைத்துப் பயிற்சிகளும் முடிந்தபிறகு அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரன்மணைக்கு அழைத்துச் செல்வார்கள்.