மயிலாடுதுறை:சத்குரு சித்தர் சுவாமிகளின் 58ஆம் ஆண்டு சித்தி நாளை முன்னிட்டு, சுவாமி ஓங்காரநந்தா என்பவர், தனது சீடர்களுடன் சுடுகாட்டில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, இனிப்புப் பண்டங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
மகா படையல்
அதனையடுத்து, 50 கிலோ அரிசி கொண்டு சோறு படைக்கப்பட்டு, ஒரே இடத்தில் குவியலாக வைத்து, அதில், சாம்பார், மோர், ரசம், அப்பளம், வடை, பாயசம், பழங்கள், இனிப்புப் பொருள்கள் கொண்டு மகா படையல் நடைபெற்றது.
இதையடுத்து மகா படையலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் சுடுகாட்டில் உள்ள ஒவ்வொரு சமாதிக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரோனா நீங்க வேண்டி சிவாய மந்திரத்தை 108 முறை கூறி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்குப் படையல் செய்யப்பட்ட உணவுப்பண்டங்கள் அங்கேயே விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை சுடுகாட்டிலேயே உண்டனர்.
சுடுகாட்டில் வினோத வழிபாடு இது குறித்து சுவாமி ஓங்காரநந்தா கூறும்போது, “சுடுகாடு என்பது புனிதமான இடமாகும். இங்கு கண்ணுக்குத் தெரியாத சூட்சும ரூபத்தில், லட்சக்கணக்கான ஆன்மாக்கள் வசிக்கின்றன. அவர்கள் அமைதி அடைய வேண்டும். அவர்கள் அமைதி அடைந்தால், இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள் ஏற்படாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி; ஆதாரங்கள் விரைவில் வெளியீடு'