தருமபுரம் ஆதீனம் உடல்நலக்குறைவு மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம்,கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு உடல்நலக் குறைவு, மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மயிலாடுதுறையில் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனம் திருமடம் உள்ளது. இந்த மடத்தை ஆதின குருமா சன்னிதானங்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
மேலும் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமாக நாடு முழுவதும் பல கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு பழமையான கோயில்களும் புனரமைக்கப்பட்டு பழமை மாறாமல் கும்பாபிஷேகங்கள் ஆதீன முன்னிலையில் நடைபெற்று வருகின்றன. ஆதீன மடாதிபதி ஆதின திருமடத்திலிருந்து பாதயாத்திரையாகக் கும்பாபிஷேகம் நடைபெறும் கோயில்களுக்குச் சென்று சொக்கநாதர் பூஜை வழிபட்டு கும்பாபிஷேகத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் உள்ள அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பாதயாத்திரையாகக் கொற்கைக்குச் சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டிருந்த ஆதீன மடாதிபதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற சோதனையில் மஞ்சள் காமாலை மற்றும் பித்தப்பையில் கல் உள்ளது என கண்டறியப்பட்டது. நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட ஆதீன மடாதிபதிக்கு இன்று காலை சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மருத்துவமனையிலிருந்து நேராக கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி காரில் திரும்பினார். வழக்கமான சொக்கநாதர் பூஜையில் ஈடுபடுவார் என்றும் பார்வையாளர்கள் குரு மகா சன்னிதானத்தை பார்ப்பதற்கும் ஆசி பெறுவதற்கும் வர வேண்டாம் என்று ஆதின பொது மேலாளர் மணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மழை வேண்டி பூஜை.. திரும்ப கேட்கத் தூண்டும் பழங்குடி பெண்களின் கும்மி பாட்டு!