மயிலாடுதுறை:மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மையான தருமபுரம் ஆதீனம் திருமடத்தின் மடாதிபதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்காரு அடிகளார் இறப்பிற்கு இன்று (அக்.20) இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மேல்மருவத்தூர் திருத்தலம் பங்காரு அடிகளார் ஆட்சிக்காலத்தில் உலகளவில் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. பட்டிதொட்டியெங்கும், கிராமங்கள் தோறும் பக்தியை உருவாக்கி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் ஸ்தாபித்த திருக்கோயிலில் அனைவரும் சென்று வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தியுள்ளார். இது சமயம் பரப்புவதற்கு மிகப்பெரிய சாதனமாக இருந்தது.
நாத்திகத்தை மடைமாற்றியவர்: நமது பக்தியின் மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் நாம் சாதிக்க முடியாததை அவர் 20 ஆண்டுக் காலத்தில் அவர் தமிழகத்தில் நாத்திகத்தை மடை மாற்றி ஆன்மீக வழியில் இட்டுச் சென்றவர். பல தலைவர்களை அவரது கோயில்களுக்கு அழைத்துச் சென்றவர். கீழ்நிலையில் உள்ள தனது தொண்டர்களை ஒவ்வொரு நிலையில் பணிகளைக் கொடுத்து அவர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார். கல்விப்பணியிலும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளிகளை நிறுவியுள்ளார்.