மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சிவாலயங்கள் இந்த ஆதீனத்திற்குச் சொந்தமானதாகும்.
வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்குத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தருமபுர ஆதினத்திலிருந்து குரு லிங்க சங்கம பாதயாத்திரை நேற்று தொடங்கியது.
ஆதீனத்தில் உள்ள ஞானமா சொக்கநாதப் பெருமான் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டுவந்த ஆத்மலிங்கத்தை தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சுமந்து பாத யாத்திரையைத் தொடங்கினார்.
வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கையொட்டி பாத யாத்திரை தொடர்ந்து திருப்பனந்தாள் காசிமட அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான், ஆதீன கட்டளை தம்பிரான்கள் ஆத்மலிங்க பட்டியை தலையில் சுமந்தபடி வர, ஒட்டகம், யானை, குதிரை ஊர்வலத்துடன் பட்டாசு முழக்கத்துடனும் பாத யாத்திரை நடைபெற்றது.
ஆத்ம லிங்க பூஜை பட்டியை சுமந்துவரும் கட்டளைத் தம்பிரான் சுவாமிகளின் கரங்களைப் பிடித்தபடி தருமபுர ஆதின 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாத யாத்திரையாக மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் சென்றார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து முக்கிய ஊர்களில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்தபடி வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு லிங்க பாத யாத்திரை சென்றடைகிறது. அதன் பின்னர், குடமுழுக்கு நிறைவடைந்தபின் ஒன்றாம் தேதி மீண்டும் பாத யாத்திரையாக தருமபுரம் ஆதீனத்திற்கு எடுத்துவரப்படுகிறது. வழியெங்கும் பொதுமக்கள் கோலமிட்டு பூரணகும்ப மரியாதை அளித்து பாத யாத்திரைக்கு வரவேற்பளித்து சாமி தரிசனம்செய்தனர்.