மயிலாடுதுறை:தருமபுர ஆதீன குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு 11ம் நாள் திருவிழாவான ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேசவிழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு தடைகளை கடந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்து வீதியுலா சென்றனர். மங்கள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கை சிவ வாத்தியங்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் குருமகா சன்னிதானம் கோலாகலமாக வீதியுலா சென்றார்.
மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் திருவிழாவில் ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தர் குருபூஜை விழா பட்டணபிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.
இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த மாதம் பல்லக்குதூக்கும் (பட்டணபிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிகொள்வதாக கடந்த 7 ம் தேதி கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார்.
இதனால் பட்டணபிரவேச பிரபலமானமானது. கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு உள்ளதால் டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.