மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலம், மயில் சிவபெருமானை பூஜித்த தலம் எனப்போற்றப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர், யானையைப் பராமரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளையாக மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களிலும் முன்னே செல்வது வழக்கம். யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும் யானை ரசிகர்களும் இன்று பொன்விழாவாக கொண்டாடினர்.
இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து, அதில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து கரும்பு, அச்சு வெல்லம், பொரி கடலை, பழ வகைகள், கிழங்கு வகைகள், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து பாசத்துடன் யானைக்கு வழங்கினர்.