நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில், ரூ.208 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.43 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். பின்பு, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், தொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நாகை, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.