தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.என்.ஜி.சி குழாயிலிருந்து வாயு வெளியேற்றம் - மயிலாடுதுறை எம்.பி., ஆய்வு - தரங்கம்பாடியில் கெயில் நிறுவனம்

நாகப்பட்டினம்: தரங்கம்பாடியில் கெயில் நிறுவனத்தின் ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணியின் போது சுமார் 15 அடி உயரத்திற்கு மேல் வாயு வெளியேறியதையடுத்து அங்கு மயிலாடுதுறை எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை எம்.பி. ஆய்வு
மயிலாடுதுறை எம்.பி. ஆய்வு

By

Published : Jul 24, 2020, 10:30 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அருகே உள்ள மேமாத்தூர் கிராமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கெயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சீர்காழி தாலுக்கா மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக பதித்து வருகிறது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 22) மேமாத்தூரில் அதன் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமார் 15 அடி உயரத்திற்கு மேல் திடீரென வாயு வெளியேறியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதற்கு கெயில் நிறுவனத்தினர் குழாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றபோது காற்று அழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் வாயு வெளியேறியதாக தெரிவித்தனர். ஆனால் வாயு வெளியேறியதை அந்நிறுவனத்தினர் மூடி மறைப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள நிலையில், மேமாத்தூரில் கெயில் நிறுவனம் 20 அடி அழத்திற்கு பைப்புகளை பதித்து தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 23) மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், வாயு வெளியேறிய இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கெயில் நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கெயில் நிறுவனம் எதிர்காலத்தில் உரிய பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. இதனால் கெயில் நிறுவனத்தை, வேளாண்துறையினர் கண்காணித்து அந்நிறுவனத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும்போது வாயு வெளியேற்றம்

ABOUT THE AUTHOR

...view details