நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் டெங்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அவசரக் கூட்டம் ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் காய்ச்சலால் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனையில் டெங்கு பாதிப்பு என முடிவு வந்தால் அந்த நோயாளியை உடனடியாக எலிசா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் உடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.